ஓட்டல்களில் பெருகும் ஈக்கள்; சுகாதார நடவடிக்கை தேவை
பொள்ளாச்சி, மே 12-ஓட்டல் மற்றும் பேக்கரிகளில், 'ஈ'க்கள் பெருக்கம் அதிகரிப்பதால், மின்சார வலை அமைப்பதை துறை ரீதியான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.கோடை காலம் துவங்கி விட்டாலே, தேங்கி நிற்கும் தண்ணீரில், ஈக்கள் மற்றும் கொசுக்கள், அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவைகள், குடிநீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் மீது அமர்கின்றன. அதனை உட்கொள்வதால், டைபாய்டு, காலரா மற்றும் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.இவ்வாறு இருக்கையில், பொள்ளாச்சி நகரில், சில பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில், சுகாதாரம் பின்பற்றப்படாத நிலையில், ஈக்களின் பெருக்கம் காணப்படுகிறது. இத்தகைய கடை உரிமையாளர்களுக்கு, மின்சார வலை அமைக்க அறிவுறுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:ஓட்டல்களில் சேகரமாகும் எஞ்சிய காய்கறி மற்றும் இலைக் கழிவுகள், குப்பைத் தொட்டியில் சேகரம் செய்யப்பட்டு, நகராட்சி துாய்மைப் பணியார்களிடம் ஒப்படைக்க வேண்டும். இருப்பினும், சில கடைகளில் உணவுக் கழிவுகளை, அருகே இருக்கும் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கொட்டுகின்றனர்.இதேபோல, தள்ளுவண்டிகளில் விநியோகம் செய்யும் உணவு வகைகளை பாதுகாக்கும் பொருட்டு, நான்கு பக்கமும் தடுப்புகள் அமைக்க வேண்டும். ஓட்டல்களில் மின்சார வலை அமைக்கவும், விதியை பின்பற்றாத ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.