புத்தகத்தை புரட்டினால் வாழ்க்கையே மாறும்: பேரூர் ஆதீனம் பேச்சு
மேட்டுப்பாளையம்; 'புத்தகத்தை மாணவர்களாகிய நீங்கள் புரட்டினால், உங்கள் வாழ்க்கையை நல்ல நிலைக்கு, புரட்டிப் போடும்,' என, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசினார். மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், ஐந்தாவது புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. புத்தகத் திருவிழா வருகிற, 17ம் தேதி வரை, இ.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறும். புத்தகத் திருவிழா துவக்க விழா நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு நேஷனல் பள்ளி நிர்வாக அதிகாரி ராமசாமி தலைமை வகித்தார்.கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து பேசு கையில், வாசிப்பு என்பது சுவாசத்திற்கு ஈடானது. தினம் சிறிது நேரம் வாசிக்கும் பழக்கத்தை, மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகத்தை மாணவர்களாகிய நீங்கள் புரட்டினால், உங்கள் வாழ்க்கையை நல்ல நிலைக்கு புரட்டிப் போடும். எனவே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை, வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார். விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கவுசல்யா, புத்தகத் திருவிழா வரவேற்பு குழு துணை தலைவர் மணி, உள்பட பலர் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி மாணவ, மாணவிகள், விழாவில் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மேட்டுப்பாளையம் தலைவர் மணி நன்றி கூறினார்.