கால்பந்து தேர்வில் தில்லுமுல்லு; ஒரே நாளில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
கோவை; இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் கூடைப்பந்து, கால்பந்து உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். நடப்பு, 2025-26ம் கல்வியாண்டுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான போட்டிகள், எஸ்.ஜி.எப்.ஐ., மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. கால்பந்து போட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு சமீபத்தில் நடந்தது. 255 மாணவர்கள், 150க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். இரு பாலருக்கும் தனித்தனி நாட்களில் நடத்தாமல், ஒரே நாளில் அவசரகதியில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காலை 8 முதல் மதியம் 3 மணி வரை, மாணவர்களுக்கான தேர்வு போட்டி, மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை மாணவியருக்கான தேர்வு போட்டி நடந்தது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியே, 600 மீ., ஓட்டம் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, இரண்டு, மூன்று போட்டிகள் நடத்தப்பட்டு, திறமையானவர்களை தேர்வு செய்யவில்லை. மாணவியருக்கான தேர்வு போட்டிகள், மூன்று மணி நேரத்தில் முடிந்து விட்டது. மாணவியருக்கு ஒரு நாள், மாணவர்களுக்கு ஒரு நாள் என, இத்தேர்வு போட்டி நடத்தப்பட்டு இருக்க வேண் டும். மாறாக, ஒரே நாளில், ஒரே மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்டதால் திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்வு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தேர்வில் தில்லுமுல்லு?
மாணவியர் பிரிவில், கோவையில் இருந்து ஐந்து பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முதல்வர் கோப்பை மாநில போட்டிக்கு தகுதி பெற்றவர்கள். இவர்களில் ஒருவர், திருப்பூரில் ஒருவர் எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் இருந்து மட்டும் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டி நடத்தியோருக்கு சாதகமானவர்களுக்காக, தில்லு முல்லு வேலை நடந்துள்ளதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர்.