UPDATED : நவ 30, 2024 07:11 AM | ADDED : நவ 30, 2024 04:33 AM
மேட்டுப்பாளையம் : தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், முடிதிருத்தும் கடைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். பல நிறுவனங்கள் அவர்களின் அடையாள அட்டை, இதர ஆவணங்கள் பெறாமல் உள்ளன. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படாத சூழலில், உயிரிழப்பு சம்பவங்களில் தொழிலாளர் நலத்துறை வாயிலாக வழங்கப்படும் சேவைகளை குடும்பத்தினர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின், சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடும்போது, அவர்கள் குறித்த விவரங்கள் அறிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்று எண் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்து, வெளி மாநில தொழிலாளர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். வரும் நாட்களில் இதற்காக முகாம்களும் நடக்க உள்ளன, என்றனர்.இதையடுத்து தற்போது மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.