நாய் கடித்ததில் புள்ளி மான் பலி வனத்துறையினர் விசாரணை
நெகமம்: நெகமம், வடசித்துாரில், நாய் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.நெகமம் அருகே வடசித்துார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், பல பயிர் சாகுபடி ஆண்டு தோறும் நடந்து வருகிறது.கோதவாடி, வடசித்துார் போன்ற நீரோடை, குளம் போன்ற பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றி போன்றவைகள் அதிக அளவு உள்ளது. இவை, வாழை மற்றும் கிழங்கு வகை பயிர்களை சேதப்படுத்தி வருவதால், இப்பகுதி விவசாயிகள் பலர் இப்பயிர்களை சாகுபடி செய்வதில்லை. இந்நிலையில், வடசித்துார் அருகே உள்ள சமத்துவபுரம், பொதிகை நகரில் புள்ளி மான் இறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனதுறையினர் மானை எடுத்துச்சென்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மான் இறப்புக்கான காரணம் குறித்து அறிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நாய் கடித்து இறந்தது உறுதியாகியுள்ளது' என்றனர்.