பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; வனத்துறையினர் தீவிர நடவடிக்கை
வால்பாறை, ;ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் சுற்றுலா பயணியர் தடையை மீறி கொண்டு வந்த, பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.இதனால், வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்ல இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை இல்லாததால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், சின்கோனா(டான்டீ) சோதனை சாவடியில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணியரிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டில், பைகளை பறிமுதல் செய்து, வனத்தினுள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், என, எச்சரித்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வாகனத்தில் வரும் போது, மலைப்பாதையில் பிளாஸ்டிக் கவர்கள் வீசுவதையும், வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.