ஏ.டி.எம்., இயந்திரம் தருவதாக பல கோடி ரூபாய் பலே மோசடி
கோவை: ஏ.டி.எம்., இயந்திரம் அமைத்து தருவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: 2024ம் ஆண்டு சமூக வலைதளங்களில் 'இசட் பே' எனும் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்., பிரான்சைஸி குறித்த விளம்பரம் வந்தது. விவரம் அறிய, நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். புகார்
அவர்கள், கோவை நவஇந்தியா அவிநாசி ரோட்டில் உள்ள, ஒரு அபார்ட்மென்ட்டின், 8வது தளத்தில் உள்ள ஐ.இசட்., இ-பேமன்ட்ஸ் நிறுவனத்துக்கு வருமாறு தெரிவித்தனர். அங்கு, நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஸ்ரீதர், இசட், 35, மாடல் இயந்திரம் குறித்து விளக்கினார். 'இயந்திரத்தை பெற, 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; 45 நாட்களுக்குள் இயந்திரம் வழங்கப்படும்' என்றார். இயந்திரம் மூலம், மாதம், 35,000 ரூபாய் நிலையான நிதி வழங்கப்படும்; ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கமிஷன் தொகை வழங்கப்படும் என, தெரிவித்தனர். நாட்டில் முதல் முறையாக, க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து பணம் பெறும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி, 5.54 லட்சத்தை, பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தோம். அதன் பின், ஏ.டி.எம்., இயந்திரங்கள் அமைக்க, கடைகளை பார்த்து முன்பணமும் வழங்கினோம். ஆனால், நிறுவனத்தினர் உறுதியளித்தபடி, ஏ.டி.எம்., இயந்திரங்களை தரவில்லை. விசாரித்த போது, 70க்கும் மேற்பட்டோரிடம் மோசடி நடந்திருப்பதும், சென்னையில் ஏற்கனவே இந்நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. நடவடிக்கை வேண்டும்
சென்னை தவிர, மதுரை, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட நாடு முழுதும் பல பகுதிகளில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது தெரிந்தது. போலீசார் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான, அங்கமுத்து துரைசாமி, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். நிறுவனம் சார்பில் இதுவரை, 300க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.