வீடு வாங்கித்தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி
கோவை: சிங்காநல்லுாரில் வீடு வாங்கித்தருவதாக கூறி ரூ. 10.89 லட்சம் மோசடி செய்த நபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இருகூர், டி.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் பார்த்திபன், 42; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, சிங்காநல்லுார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் அறிமுகமானார். அவரிடம் பார்த்திபன், தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, தனக்கு தெரிந்த அபார்ட்மென்டில் வீடு இருப்பதாகவும், அதை வாங்கி தருவதாகவும், ஜெகநாதன் தெரிவித்தார்.இதை நம்பி பார்த்திபன், 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பல்வேறு தவணைகளில் ரூ.10.89 லட்சம் ஜெகநாதனிடம் கொடுத்தார். பணம் பெற்று சில வருடங்கள் ஆகியும், அவர் வீடு வாங்கித் தராமல் இருந்துள்ளார்.பார்த்திபன் பணத்தை திருப்பி கேட்ட போது, ரூ. 90 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.இது குறித்து ஜெகநாதனிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல் இருந்தார். பார்த்திபன் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.