உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மாதிரி தேர்வுகள், இலவச உணவு வசதி

மாநகராட்சி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மாதிரி தேர்வுகள், இலவச உணவு வசதி

கோவை ;கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பு, ஆர்.எஸ்.புரம் வெட்டர்பர்ன்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.2025-ம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லுாரி சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு மே 4-ல் நடைபெறுகிறது. அத்தேர்வை எதிர்கொள்ள, கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக, மாநகராட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது; மே 2 வரை நடைபெறுகிறது. தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் இவ்வகுப்புகளில் சேர, 41 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 27 மாணவர்கள் தொடர்ந்து கலந்துகொண்டு பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.மூன்று ஆசிரியர்கள் சுழற்சி முறையில் உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்டப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாநகராட்சி கல்வி அதிகாரி கூறுகையில், 'மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். 'ஆன்லைன்' மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. ஓ.எம்.ஆர்., தாளில் மாணவ - மாணவியர் மாதிரி தேர்வு எழுதுகின்றனர். இது, அவர்களை நேரடி தேர்வில் பதற்றமின்றி எழுத உதவுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர்' என்றார்.

மிகவும் பயனளிக்கிறது

'அதிக பணம் செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி பெற இயலாத மாணவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் இத்தகைய இலவச வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சிகள் நடத்தப்பட்டு, மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடிகிறது' என, கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ