உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் பழச்செடிகள்; தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

மானிய விலையில் பழச்செடிகள்; தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

பெ.நா.பாளையம்; தோட்டக்கலை துறை சார்பில், 100 சதவீத மானியத்தில் பழச்செடிகள், காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை நஞ்சில்லாமல் இயற்கை முறையில் விளைவித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள், 100 சதவீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 60 ரூபாய் மதிப்பு உள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும், 100 ரூபாய் மதிப்புள்ள எலுமிச்சை, கொய்யா மற்றும் பப்பாளி செடிகள் அடங்கிய தொகுப்பு, 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. பழச்செடி தொகுப்பு மற்றும் காய்கறி விதை தொகுப்பு தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் horticulture.gov.in.kit என்ற இணைய தளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஆதார் நகலை சமர்ப்பித்தும் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !