குப்பை கிடங்கு பிரச்னை; பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கில், கடந்தாண்டு தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது தொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. கடந்தாண்டு ஏப்., 6 மாலை, 5:45 மணியளவில் தீப்பற்றி எரிந்தது; 17ம் தேதி வரை தீ எரிந்து கொண்டிருந்தது. கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் தடுமாற்றம் அடைந்தனர். மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் பார்வையிட்டு, நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு தொடர்பாக ஆய்வு செய்தனர். டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றியது. இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை கேட்டது.இதைத்தொடர்ந்து, பதிவேடுகளில் உள்ள தகவல்கள் அடிப்படையில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பாக, ஈஸ்வரன் மற்றும் மோகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நாளொன்றுக்கு, 1100-1200 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், 950 டன் கழிவுகள் அழிக்கப்படுவதாகவும், மீதமுள்ள கழிவுகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தனது அறிக்கையில் கமிஷனர் தெரிவித்துள்ளார்.'பயோமைனிங்' முறையில் 9,40,044 கன மீட்டர் பழைய கழிவு அழிக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 7,43,287 மெட்ரிக் டன் பழைய கழிவு அழிக்கப்பட வேண்டும். வெள்ளலுாரில் குப்பை கிடங்கு செயல்படுவதற்கான அனுமதி, 2019 மார்ச், 31ல் முடிந்து விட்டது; அனுமதியை இன்று வரை புதுப்பிக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016ன் படி அனுமதியை புதுப்பிக்க அறிவுறுத்தினோம்; விண்ணப்பிக்கவில்லை. கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி, விதிகளை பின்பற்றுமாறு, மாநகராட்சிக்கு பலமுறை உத்தரவிடப்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை விதியை பின்பற்றாததால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, 2020 ஏப்., முதல் நவ., வரையிலான காலத்துக்கு, 80 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.வெள்ளலுார் பகுதியில், 14 இடங்களில் கிணறுகளில் தண்ணீர் மாதிரி சேகரித்து, பரிசோதிக்கப்பட்டது; 13 இடங்களில் உப்புத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது. இதில், மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணற்று நீரில் உப்புத்தன்மை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதேபோல், ஆறு இடங்களில் காற்று மாசு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சில இடங்களில் வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக இருந்தது.நாளொன்றுக்கு, 600 டன் குப்பை கையாள, கோயமுத்துார் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நிறுவனம் பெற்றுள்ள அனுமதி, 2025 மார்ச், 31 வரை செல்லுபடியாகும். 'பயோமைனிங்' முறையில் மீட்ட, 50 ஏக்கர் நிலத்தை ஆராய்ந்து சீரமைக்க வேண்டும். 24 ஆயிரம் டன் ஆர்.டி.எப்., கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்து அழிக்க வேண்டும். மீதமுள்ள கழிவுகளை அழிக்க, குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் 'பிளான்ட்' அமைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.