குப்பையால் சுகாதாரம் பாதிப்பு; அப்புறப்படுத்த வலியுறுத்தல்
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் குப்பையை அகற்றி, கிணற்றை துார்வார வேண்டும்,' என, பா.ஜ.வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. வடக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் கருணாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் துரை மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒக்கிலிபாளையம் செல்லும் ரோட்டில், அங்கன்வாடி மையம் அருகே அதிகளவில் குப்பை குவிந்துள்ளது. குப்பையை ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால், தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் இருந்து, பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து ரோட்டில் விழுகிறது. இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகளும் சிரமப்படுகின்றனர். எனவே, குப்பையை முறையாக அப்புறப்படுத்தவும், அங்கன்வாடி மையம் அருகே உள்ள புதரை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், கிராமத்தில், 40 ஆண்டுகளாக நீர் ஆதாரமாக இருக்கும் கிணறு, எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமல் உள்ளது. கிணற்றுநீர் மிகவும் அசுத்தம் அடைந்துள்ளது. இந்த கிணறை துார்வாரி பாதுகாப்பான முறையில் கிரில் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.