| ADDED : ஜன 03, 2024 11:49 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் உள்ள ரோட்டில், அதிகளவு குப்பை இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், வடசித்துார், சொக்கனுார் போன்ற பகுதிகளுக்கும், மின்வாரிய அலுவலகம் மற்றும் அரசம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வழித்தடமும் இங்கு அமைந்துள்ளது.இதில், மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியில் மயானம் உள்ளது. மேலும், இந்த ரோட்டில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன.இந்த செக்போஸ்ட் பகுதியில் ரோட்டின் அருகே, அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பை, வீணான காய்கள், காலி மது பாட்டில்கள் என, குப்பை அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அவ்வழியில் செல்பவர்களுக்கு, நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அங்குள்ள குப்பைக்கு அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், அருகில் உள்ளவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.