மேட்டுப்பாளையம்: மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை நான்கு வகைகளாக, தரம் பிரித்து வழங்குவது குறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்களுக்கு குப்பைகளை நான்கு வகைகளாக, தரம் பிரித்து வழங்குவது குறித்து, நகராட்சி நிர்வாகம் செயல் விளக்கம் செய்து வருகிறது. இரண்டாவது வார்டு, பாலாஜி நகரில், நகராட்சி கமிஷனர் அமுதா, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எவ்வாறு வாங்குகின்றனர். பொதுமக்கள் எவ்வாறு தரம் பிரித்து வழங்குகின்றனர், என்பது குறித்து, ஆய்வு செய்தார். அப்போது கமிஷனர் அமுதா, பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: ஈரக்கழிவு என்பது உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகும். உலர் கழிவு என்பது பேப்பர், அட்டைகள், பிளாஸ்டிக் கேரிபேக் ஆகியவையாகும். சுகாதாரக் கழிவு என்பது குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர், நாப்கின் ஆகியவையாகும். சிறப்பு கழிவு என்பது எலக்ட்ரிக்கல் சம்மந்தமான ஒயர், பல்புகள், மொபைல் போன் பேட்டரிகள் உள்பட எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்கள் ஆகும். பொதுமக்கள், குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம் நகராட்சியில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, முன்மாதிரி நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.