சிறுத்தை கவ்விய சிறுமி வனத்தில் சடலமாக மீட்பு
வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி தோட்டப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இவர்கள் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் 5 வயது மகள் ரோஸ்லிகுமாரியை சிறுத்தை கவ்விச் சென்றது.சிறுமியை மீட்க, அப்பகுதியினர் சிறுத்தையை விரட்டிய போது, வனப்பகுதியின் சிறிது துாரத்தில் சிறுமியின் ஆடை மட்டுமே கிடந்தது. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.நேற்று காலை, போலீஸ் துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, 'ட்ரோன்' பயன்படுத்தி, வனத்துறையினருடன் இணைந்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 13 மணி நேர தேடுதலுக்குப் பின், சிதறிக் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.சிறுத்தையின் பசிக்கு இரையான குழந்தையின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, 50,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.