சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா அலங்கரித்த தேரில் அருள்பாலித்த அம்மன்
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தார்.பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 12ம் தேதி துவங்கியது. கம்பம் நாட்டுதல், கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா; பூவோடு வழிபாடு நடந்தது.பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை எடுத்தும், அடி அளந்தும் வழிபாடு செய்தனர். நேற்றுமுன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று, காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.தேரோட்டத்தை முன்னிட்டு, 50 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் நீல நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயரம் உள்ள தேரில் விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.விநாயகர் தேர் முதலில் வடம் பிடித்துச்செல்ல, தொடர்ந்து அம்மன் தேர் மாலை, 4:50 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டது. தேரின் மீது வாழைப்பழங்களை வீசி பக்தர்கள் வழிபட்டனர்.தேரினை பெண்களும், ஆண்களும் சமமாக இழுத்துச் சென்றனர். மழைப்பொழிவு இருந்தாலும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடிக்க, மாரியம்மன், விநாயகர் பவனி வந்தனர்.தேரோட்டத்தில், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் மற்றும் ஜமீன் குடும்பத்தினர், கவுமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம், பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள், எம்.பி., ஈஸ்வரசாமி, செயல் அலுவலர் கந்தசாமி, தக்கார் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேரோடும் வீதியில் துவங்கிய முதல் நாள் தேரோட்டம், மதுரைவீரன் கோவில் வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாம் நாள் தேரோட்டமும், நாளை மூன்றாம் நாள் தேரோட்டமும் நடக்கிறது. வரும், 1ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகமும் நடக்கிறது.