மாநிலத்தில் முதலிடம் பெற்ற அரசு ரத்த வங்கி; 9 மாதங்களில் 2,106 யூனிட் சேகரிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மாநிலத்தில் முதலிடம் பெற்றது. ரத்த வங்கி குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ பயனாளிகள் நலச்சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ரத்த வங்கி செயல்படுகிறது. இங்கு ரத்தவங்கி பிரிவு டாக்டர் மாரிமுத்து, செவிலியர்கள் தேன்மொழி, அன்னக்கொடி, செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, ஆய்வக நுட்புனர் மகாலட்சுமி குழுவினர் பணியாற்றுகின்றனர். ரத்த வங்கி சார்பில், கடந்த மாதம் 17ம் தேதி முதல் கடந்த, 2ம் தேதி வரை ரத்த தான வாரம் நடத்தப்பட்டது. அதில், அதிக முகாம் நடத்தி ரத்தம் சேகரித்ததற்காக மாநிலத்தில் முதலிடம் பெற்றது. இதற்கான விருது, சென்னையில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.விருது பெற்ற ரத்த வங்கி குழுவினருக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, குழந்தைகள் நல மருத்துவர் செல்வராஜ், மருத்துவ பயனாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது: தேசிய தன்னார்வலர்கள் ரத்த தான வாரத்தையொட்டி, அதிகளவு முகாம் நடத்தப்பட்டு, 268 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. அதிக ரத்த தானம் பெறப்பட்டதையடுத்து, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முதல் மூன்று இடம் தேர்வு செய்யப்பட்டத்தில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றது. இந்த விருது பெற்றது ஊக்கமளிப்பதுடன், மேலும் ரத்த தானம் முகாம்களை நடத்த பணியாற்ற உதவும்.அரசு மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் ரத்தம், கோலார்பட்டி, வால்பாறை, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு ரத்த இருப்பு மையத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். மேலும், தனியாருக்கு மருத்துவ அவசரம் கருதி வழங்கப்படுகிறது.பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு ரத்தம் தேவைப்படும் போது அதிகளவு முகாம்கள் நடத்தி சேகரித்தும் வழங்கப்படுகிறது. கடந்த, ஒன்பது மாதங்களில், 2,106 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவ கல்லுாரியில் இருப்பது போல பிளாஸ்மா சிகிச்சை துவங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவர் கொடுக்கும் ரத்தத்தை நான்கு பேருக்கு பயன்படுத்த உதவும். ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களை பிரித்து வழங்க முடியும். டெங்கு, கர்ப்பிணிகள், விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதற்கான வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.