அரசு பள்ளி மாணவர்களுக்கு களி உணவு! உயர்த்தணும் எண்ணெய் அளவு
கோவை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் சேமியா காய்கறி கிச்சடியின் தரம் குறித்தும், அதற்காக வழங்கப்படும் பொருட்களின் அளவு குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில், அரிசி நொய் உப்புமா, வெண் பொங்கல், சேமியா காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவை உப்புமா சாம்பாருடன் வழங்கப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வழங்கப்படும் பொருட்களை பயன்படுத்தி உணவு சமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சமைக்கும் போது எண்ணெய் அளவு குறைவாக இருப்பதால், சேமியா கிச்சடி பிசுபிசுப்பாகி, மாணவர்கள்வெறுக்கும் நிலைஉருவாகி வருகிறது. ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: வீட்டில் நான்கு பேருக்கு ரவை உப்புமா அல்லது சேமியா சமைக்கும் போதே, அது உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்க,போதிய அளவில் எண்ணெய் ஊற்ற வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் ஒரு மாணவருக்கு வெறும் 3 மில்லி எண்ணெய் என்பது எப்படிப் பத்தும்? எண்ணெய் பற்றாக்குறையால் சமைக்கப்படும் உணவு, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்புத் தன்மையுடன், 'களி' போன்று மாறிவிடுகிறது. சேமியாவின் தரமும் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை. மாணவர்கள் அந்த உணவை சாப்பிட தயங்குகின்றனர். சில சமயங்களில் தவிர்க்கின்றனர். எனவே, இந்த திட்டத்தின் முழு பலனும் மாணவர்களை சென்றடைய, அரசு தரமான பொருட்களை, அதிகளவில் வழங்குவது அவசியம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
3 மில்லி ஆயில்தான்!
தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஒரு மாணவருக்கு சேமியா - 50 கிராம், பட்டை, லவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை (தேவைக்கு), எண்ணெய் - 3 மில்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - 2 கிராம், பெரிய வெங்காயம் - 6 கிராம், கடலை பருப்பு - 0.6 கிராம், தக்காளி - 6 கிராம், பீன்ஸ், பச்சை பட்டாணி, காரட் தலா - 4 கிராம் அளவில் வழங்கப்படுகிறது.