உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க ரூ.30 கோடியில் அரசுக்கு கருத்துரு

புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க ரூ.30 கோடியில் அரசுக்கு கருத்துரு

கோவை; புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, ரூ.30 கோடியில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒதுக்கிய, மத்திய சிறைக்குச் சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நுாலகத்தின் நுழைவாயில் பகுதி தற்போது அமைந்துள்ள காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் இடத்தில் அமைய உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன் தவிர, போக்குவரத்து பிரிவு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நுாலகத்துக்கான நுழைவாயில் அமைக்கப்பட உள்ளதால், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை இடித்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய போலீஸ் ஸ்டேஷன் ரூ.30 கோடியில் அமைக்கஅரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. புதிய போலீஸ் ஸ்டேஷன், 75 சென்ட்டில், அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து போலீஸ் அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலி கமாக, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சாய்பாபா காலனி, போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு ராம் நகர் பகுதிக்கும் மாற்றப்பட உள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில்,''பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் இருக்கும். இதைக்கருத்தில் கொண்டு, 75 சென்ட் இடத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.30 கோடியில் கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஒப்புதலுக்கு பின் பணிகள் நடக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை