இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க வேண்டும்; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை
சூலுார்,: 17 வயதுடைய, இளம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க, அதிக விண்ணப்பங்களை பெற வேண்டும், என, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையம்,வரும் ஜன., 1 ம்தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயதுடைய புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், நீக்கம் செய்யவும் முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. வரும், நவ., 16, 17 மற்றும் 23, 24 ம்தேதிகளில் நடக்கும் முகாம்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் சூலுார் மற்றும் வாரப்பட்டியில் நடந்தது.தாசில்தார் தன சேகர் பேசியதாவது:சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 333 ஓட்டு சாவடி மையங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள், அங்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 வரை, இருந்து, விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பங்கள் பெறுவதை, படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும்.17 வயதுடைய இளம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், அதிக விண்ணப்பங்களை பெற வேண்டும்.புதிதாக பெயர் சேர்க்க படிவம், 6 ஐ அளிக்கும் விண்ணப்பதாரரின் பெயர், கடந்த, அக்., 29 ம்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என, ஆய்வு செய்து, பெயர் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற வேண்டும். ஒரு அரசியல் கட்சி பிரமுகரிடம் இருந்து, அதிகபட்சமாக, 30 விண்ணப்பங்களை மட்டுமே பெறவேண்டும். தனி நபரிடம் இருந்து மொத்தமாக விண்ணப்பங்களை பெறக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தின மகராஜன் பேசுகையில், விண்ணப்பங்களை பெறும் போது, ஆதார் எண் நகலையும் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். 100 வயதுடைவர்கள் பட்டியலில் இருந்தால், அவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும், என்றார்.