அரிசி, பருப்புக்கு ஜி.எஸ்.டி. விலக்கு; மளிகை வியாபாரிகள் கோரிக்கை
கோவை; கோவை மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில், 69வது ஆண்டு மகாசபை கூட்டம், தென்கரையில் நடந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக இணையதளம் வெளியிடப்பட்டது. அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க மத்திய அரசுக்கும், மின்னணு தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முத்திரையிட வேண்டும் என்பதை, இரண்டாண்டுக்கு ஒரு முறை என மாற்றிஅமைக்க, மாநில அரசுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்துதல், மேம்பால பணிகளை விரைந்து முடித்தல், மார்கெட் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, சின்னத்திரை நடிகர் ஆதவன் பங்கேற்ற, பொழுதுபோக்கு கலை நிகழ்வுகள் நடந்தன. மளிகை வியாபாரிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரபாகரன், துணைத்தலைவர் கணேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.