மேலும் செய்திகள்
தர்மபுரி, கி.கிரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
31-Dec-2024
கோவை புறநகரில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பெரியநாயக்கன்பாளையம்,பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் விஸ்வநாதபுரம் அருகே உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவை ஒட்டி, ஒயிலாட்ட நிகழ்ச்சிகள், மகா உற்சவர் திருவீதி உலா, கம்பத்தாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்னதானமும் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற் கல்வியியல் கல்லூரியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடந்தது. வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமை வகித்தார். விழாவை ஒட்டி துறவிகள் மற்றும் இசை ஆசிரியர்களின் பஜனை மற்றும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. மகாவீரர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மங்கள ஆரத்தி நடந்தது. விழாவில் வித்யாலய வளாகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், துறை தலைவர்கள் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதே போல பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தாளத்துறையில் டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதம் பாடப்பட்டது. தாசன் ரிஷி பட்டர் புதிய வஸ்திரம் மற்றும் தங்க கவசம் அணிவித்தார். அதன் பின் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, முலாம்பழம் பழங்களாலும், கரும்பாலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்தனர்.காலை, 6:00 மணியிலிருந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சிறுமுகை அருகே இடுகம்பாளையத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். சூலூர்
சூலூர் வட்டாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஜெயந்தி விழா நேற்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. கணியூரில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அனுமந்த ராயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரிய குயிலியில் உள்ள ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில், ஹனுமன் ஜெயந்தி விழா, கடந்த,28 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் நாம சங்கீர்த்தனம், பஜனை வள்ளி கும்மியாட்டம் நடந்தது. கள்ளப் பாளையம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ரகு வீர ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. காய், கனி, வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னூர்
அன்னூர் வட்டாரத்தில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. ஓரைக்கால் பாளையத்தில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராம வரத பெருமாள் கோவிலில் அனுமன் சன்னதி உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 5:30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை நடந்தது. காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கஞ்சப்பள்ளியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. 108 வடைகள் கொண்ட மாலை சாற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். -நிருபர் குழு-
31-Dec-2024