இனிய இல்லம்!கோவையில் வீடு வாங்குவது அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் துறையில் நீடிக்கும் வளர்ச்சி
கோவை: வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக, கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது என பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாங்கும் சொத்து என்பது, அவர்களுக்கு, முக்கியமான முதலீடுகளில் ஒன்று. முக்கியமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு, தனி வீடு வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.இது பாதுகாப்பான, நீண்ட கால முதலீடு மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் துறைக்கு நிலையான வளர்ச்சியையும் அளிக்கிறது.இந்தியாவின் மெட்ரோ நகரங்களில், ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.வீடுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவையிலும், பல்வேறு இடங்களில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்), கோவை மைய துணை தலைவர் அபிஷேக் கூறியதாவது:சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபாய், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கக் கூடிய இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால், அங்கிருக்கும் இந்தியர்களுக்கு, பணி நிரந்தரம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.இதனால், இந்தியாவில் தங்களுக்கு சொத்து இருக்க வேண்டும்; இங்கு திரும்பும் பட்சத்தில், அதன் வாயிலாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், இங்கு முதலீடு செய்கின்றனர்.கடந்த காலங்களில், ஒரு குடியிருப்பு முடியும் தருவாயில் தான், அதை வாங்கி வந்தனர். தற்போது, பூமி பூஜை துவங்கும் போதே, வாங்க துவங்கி விட்டனர். இதனால், தமிழகத்தில் பரவலாக, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
சொந்த வீடு கனவு
கோவையிலும், என்.ஆர்.ஐ.,க்களின் முதலீடு அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல், அவிநாசி ரோடு , திருச்சி ரோடு, சக்தி - மேட்டுப்பாளைம் சாலைகளில், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.தற்போது, பல பகுதிகளில், வீட்டு வாடகை அதிகரித்து விட்டது. வாடகை வீட்டில் இருப்பதற்கு பதில், கூடுதலாக செலவு செய்தால், சொந்த வீட்டில் குடியேறலாம் என்ற எண்ணமும், இதற்கு காரணம்.