உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 70 ஆண்டுகளாக இப்படியொரு நிலையா? இருளில் தவிக்கும் பழங்குடி மக்கள்

70 ஆண்டுகளாக இப்படியொரு நிலையா? இருளில் தவிக்கும் பழங்குடி மக்கள்

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின குடியிருப்புகளுக்கு, மின் இணைப்பு வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை நீக்க வேண்டும், என, தமிழக முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சரகத்தில், எருமைப்பாறை குடியிருப்பு மக்கள், மின்இணைப்பு வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியதால் மின்வாரியம் சார்பில், அங்கு நான்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், மின் இணைப்பு வழங்க, 'ஆன்லைன்' வாயிலாக, 28 குடும்பங்கள் தலா, 3,800 ரூபாய் வைப்புத்தொகை மின்வாரியத்துக்கு செலுத்தியுள்ளனர். ஆனால், வனத்துறை இதுவரை தடையில்லா சான்று வழங்க மறுத்துவருவதால் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளர் தனராஜ் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 38 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. கடந்த, 70 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின மக்களின் குடிசைகள் இருளில் மூழ்கியுள்ளன. அதே நேரத்தில், நீர் மின்நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள், சுற்றுலா பயணியர் தங்கும் விடுதிகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே உள்ள பழங்குடியின குடியிருப்புக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. எருமைப்பாறை செட்டில்மென்ட் பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து செட்டில்மென்ட் பகுதிகளுக்கு பாகுபாடின்றி மின் இணைப்பு வழங்க விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, கூறினார்.

கவனிப்பாரா கலெக்டர்

கடந்த, இரு வாரங்களுக்கு முன், கீழ் பூனாட்சி கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், இங்கு வசிக்கும், 47 குடும்பங்களில், நான்கு குடும்பங்கள் மட்டுமே, தலா, 6,000 ரூபாய் செலுத்தி மின் இணைப்பு பெற்றுள்ளனர். பொருளாதார ரீதியாக பின் தங்கிய மற்ற குடும்பங்கள், மின் இணைப்புக்கான வைப்புத்தொகை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மின் இணைப்பு வழங்க தேவையான நிதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும், என வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை