ஹலோ...எங்க காலேஜ்ல சேர வாங்க! மாணவர்களுக்கு போனில் தொந்தரவு
கோவை; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சில, அரசு உத்தரவையும் மீறி தனியார் நிறுவனங்களை நேரடியாக பள்ளிகளில் 'கேன்வாஸ்' செய்ய அனுமதித்ததால், மாணவர்களுக்கு போன் வாயிலாக, இரவு, பகலாக அழைப்புகள் வருவதாக, புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. தற்போது, உயர்கல்வி சேர்க்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, தங்கள் கல்லுாரி, பயிற்சி நிறுவனங்களில் சேருமாறு அழுத்தம் தருகின்றனர். நேரம் காலம் பார்க்காமல், இவ்வாறு போனில் அழைப்பு விடுப்பதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.சில பள்ளி தலைமையாசிரியர்கள், குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்களை, வகுப்பறைகளில் 'கேன்வாஸ்' செய்ய அனுமதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டதற்கு, “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தனியார் நிறுவனங்களை கேன்வாஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது; மாணவர்களுக்கு சேர்க்கை தொடர்பான அழுத்தம் கொடுக்கவே கூடாது என, பலமுறை உத்தரவிட்டுள்ளோம்.தற்போது உயர்கல்வி சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில், அரசு பள்ளி மாணவர்களின் விவரங்கள் எவ்வாறு கசிகிறது என்பது தெரியவில்லை. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நேரத்தில், இது தொடர்பான நெறிமுறைகள், கடுமையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும்,” என்றார்.