உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை அகற்றும் பிரச்னைக்குஇதோ இருக்கு தீர்வு! சுகாதார ஆய்வாளர்கள் ஐடியா

குப்பை அகற்றும் பிரச்னைக்குஇதோ இருக்கு தீர்வு! சுகாதார ஆய்வாளர்கள் ஐடியா

கோவை: வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து சேகரித்தாலும், மாநகராட்சியில் குப்பை பிரச்னை தீர்ந்தபாடில்லை. மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் போதுமான வரவேற்பு இல்லை. துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்து, முழு நேர பணியாக செய்வது உட்பட நிறைய ஆலோசனையை அள்ளித்தருகின்றனர் சுகாதார ஆய்வாளர்கள்.மாநகராட்சியில் தினமும் 1200 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை இரண்டாக பிரித்து வாங்கவே துாய்மை பணியாளர்கள் சிரமப்படும் நிலையில், இப்போது நான்காக பிரிக்க வேண்டும் என்கின்றனர்.குப்பை தொட்டிகளையும் அகற்றி விட்டதால், இரவிலும், போகிற போக்கிலும் தெருவோரம் வீசப்படும் பிரிக்கப்படாத குப்பை மூட்டைகள் அதிகரித்து விட்டன.இதற்கு என்ன தான் தீர்வு? சுகாதார ஆய்வாளர்கள் சிலரிடம் நமது நிருபர்கள் பேசினர். அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள்:l இவ்வளவு பெரிய நகரில் குப்பையை மேனேஜ் செய்ய, ஆட்கள் போதாது. 'மைக்ரோ லெவலில்' அணுக வேண்டும். 600 வீடுகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும்.l எத்தனை வீடுகள் இருக்கின்றன, எத்தனை பேர் வசிக்கின்றனர் என்கிற விவரம் மாநகராட்சியிடம் துல்லியமாக இருக்கிறது. அதற்கேற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். * ஏதேனும் ஒரு பகுதிக்கு துாய்மை பணியாளர் வேலைக்கு வரவில்லை என்றால், வேறு ஆளை அனுப்ப வேண்டும். 10 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' முறையில் தயாராக இருக்க வேண்டும்.l வாரத்தில் ஏழு நாட்களும் குப்பை அள்ள வேண்டும். ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு தரலாம். குப்பை வாகனம் பழுதானால், வேறு வாகனம் அனுப்ப வேண்டும்; ஒப்பந்தப்படி, 10 சதவீத வண்டி தயாராக வைத்திருக்க வேண்டும்.l குப்பை சேகரிப்பு குறைகேட்பு மையம் அமைக்க வேண்டும். லாரியில் ஜி.பி.எஸ். கருவி இயங்குகிறதா; வழக்கமான ரூட்டில் செல்கிறதா; குப்பை அள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.l குப்பை அள்ளுவது பகுதி நேர வேலை அல்ல. முழு நேரமும் தொடர வேண்டும். எந்த இடத்திலும் குப்பை தேங்காததை உறுதி செய்ய வேண்டும். 2 ஷிப்ட், 3 ஷிப்ட் என வேலை நேரத்தை மாற்றலாம். ஊக்கத்தொகை கொடுக்கலாம்.l வீடுகளில் குப்பை எடுப்போரை ஓட்டல்களிலும் எடுக்கச் சொன்னால், ஒரே டிரிப்பில் லாரி லோடாகி விடும். மீதமுள்ள வீடுகளில் எடுக்க முடியாது. லாரி கிடங்கிற்கு சென்று வருவதற்குள் வீட்டில் இருப்பவர்கள் வேலைக்கு சென்று விடுவர். அதனால், ஒவ்வொரு செக்டராக பிரித்து சேகரிப்பதே தீர்வு.l மக்கும் குப்பையை தினமும் சேகரிக்கலாம். மக்காத குப்பையை வாரத்தில் ஒரு நாள் சேகரித்தால் போதும். கேரளத்தில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, குப்பையை எளிதாக பிரிக்க உதவும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ம.பி.யின் இந்துார் மாநகராட்சியில், குப்பை மேலாண்மை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. நம்மூரில் இருப்பதை போல, அங்கும் 22 லட்சம் மக்கள் தொகையே இருக்கிறது. அங்கு போய் பார்த்து வந்து பின்பற்றினால் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்றும் சில சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

'அபார்ட்மென்ட், ஓட்டல்குப்பை அகற்ற தனி டீம்'

'ஒவ்வொரு வீட்டின் கதவிலும் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். குப்பையை தரம் பிரித்து கொடுக்கும் வீட்டில் ஸ்கேன் செய்ய வேண்டும்; கொடுக்காத வீட்டில் ஸ்கேன் செய்யக் கூடாது. எந்தெந்த வீடுகளில் குப்பை கொடுக்கவில்லை என்பதை அறிந்து, மறுநாள் நேரில் ஆய்வு நடத்த வேண்டும். அவர்கள் குப்பையை தரம் பிரித்து கொடுக்கச் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரிக்க தனி டீம், மார்க்கெட் கழிவுகள், ஓட்டல் கழிவுகளை சேகரிக்க தனி டீம் உருவாக்க வேண்டும்...' என்கின்றனர், வேறு சில சுகாதார ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெகதீசன்
செப் 24, 2026 14:40

இப்படி கள நிலவரத்தை தெளிவாக சொல்லும் ஊழியர்களின் கருத்தை கேட்டு செயல்பட்டால் திடக்கழிவு மேலாண்மை சீராகும். AC அறையில் உட்கார்ந்து திட்டம் தீட்டினால் சரி வராது.


V RAMASWAMY
செப் 24, 2026 09:52

பிரச்சினை என்னவென்றால், சிங்கப்பூருக்கோ மற்ற எந்தஇந்திய ஊருக்கும் சென்று பார்த்து ஆய்வு செய்ய பணியாளர்களை அனுப்பினால், அவர்கள் ஆய்வு செய்யாமல் மக்கள் பணத்தில் சுற்றுலா செய்துவிட்டு இங்கு வந்து அமுல் படுத்த தெரியவில்லை அல்லது அனுமதிக்கப்படுவதில்லை. முக்கிய காரணம் அரசு பணியாளர்கள் சம்பளம் மட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்யமலிருக்க பழகிவிட்டார்கள். உடனடி தண்டனை கொடுக்கும் நிலை வந்தால் தான் எதுவுமே உருப்படியாக செயல்படமுடியும். சிங்கப்பூரில் தண்டனை கடுமை, அரசு பணியாளர்கள் மீது ஒரு சிறிய புகார் வந்தாலே போதும் அவர் வேலைக்கு ஆபத்து, ஆகவே அவர்கள் பணியை பழுதின்றி தாமதமின்றி செய்கின்றனர். இங்கோ அது நடக்காது, அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகளும் மீடியா டி ஆர் பி ரேட்டிங்கிற்காகவும் மல்லு கட்டிக்கொண்டு குற்றவாளிகளை அரவணைக்க வந்துவிடுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி