| ADDED : டிச 02, 2025 06:33 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் உயர் மின் அழுத்தத்தால், எலக்ட்ரானிக் சாதனங்கள் சேதமடைந்துள்ளது. கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தின் பின்புறம் சர்வீஸ் ரோட்டோரம் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஒன்றிய அலுவலகத்தில் உயர் மின்னழுத்தத்தால் கம்ப்யூட்டர், மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதடைந்துள்ளது. இது மட்டுமின்றி அவ்வப்போது உயர் மின் அழுத்தத்தால் பல்புகள் வெடித்து சிதறுகிறது. இதனால் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர், மின்விசிறி உள்ளிட்டவற்றை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். இப்பிரச்னையில் மின்வாரியத்தினர் உரிய கவனம் செலுத்த வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 6 மாதங்களாக உயர் மின் அழுத்த பிரச்னை உள்ளது. இதனால், ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதடைந்துள்ளது. அடிக்கடி இதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் எலக்ட்ரீஷனை வைத்து ஆய்வு செய்த போது, 240 வாட்ஸ் அளவு வரவேண்டிய மின்சாரத்திற்கு பதில், 270 முதல் 330 வாட்ஸ் வரை மின்சாரம் சப்ளையானதால், எலக்ட்ரானிக் சாதனங்கள் சேதமடைந்தது தெரியவந்தது. இதுபற்றி மின்வாரியத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலகத்துக்கான மின் சேவையை, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர்மின் அழுத்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது தான், அலுவலகத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பாக கையாள முடியும். இவ்வாறு, கூறினர்.