உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

கோவை: கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ளடக்கிய கல்வி முறையின் கீழ் 3,500க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் சிலர் பள்ளிகளிலும், சிலர் பகல் நேர பாதுகாப்பு மையங்களிலும் பயில்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் மாற்றுத்திறன் கொண்ட மற்றும் சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் உடைய, 37 மாணவர்கள் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, துணை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்விப் படிப்புகள் குறித்தும், அவற்றில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ள உள் ஒதுக்கீடு, சேர்க்கை நடைமுறைகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, உயர்கல்வி வழிகாட்டி திட்ட அலுவலர் சுபாஷ், அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

போக்குவரத்து வசதி

இதுபோன்ற கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர்களுடன் பங்கேற்கின்றனர். போக்குவரத்திற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என அவர்கள் கருதுகின்றனர். எனவே, மாணவர்களின் வசதிக்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டால் உதவியாக இருக்கும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை