நெடுஞ்சாலையில் கழிவு நீர் திணறும் வாகன ஓட்டுநர்கள்
உடுமலை : பிரதான ரோட்டில், பாதாளச்சாக்கடை குழாய் சேதமடைந்து, கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டுநர்கள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி, 2 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலை நகரப்பகுதியில் அமைந்துள்ளது.போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது. இருப்பினும், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நெரிசல் தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடைக்கான பிரதான குழாய், சேகரிப்பு குழாய் மற்றும் ஆளிறங்கு குழி அமைக்கப்பட்டது. இதில், ஆங்காங்கே ரோட்டில், ஆளிறங்கு குழி மூடி உடைந்துள்ளது.அதிலிருந்து கழிவு நீர் வெளியேறி, மாநில நெடுஞ்சாலையில் வெள்ளமாக செல்கிறது; சில இடங்களில் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் ரோட்டிலேயே தேங்குகிறது.இதனால், வாகன ஓட்டுநர்கள் திணறுவது தொடர்கதையாக உள்ளது. மூடி உடைந்துள்ளதால், நிலைதடுமாறும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.நகரப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை முழுமையாக சீரமைக்க வேண்டும்.சந்திப்பு பகுதியில், ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்தகைய பணிகளை மேற்கொண்டு, இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.