உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் நிதி தவறான பயன்பாடு; ஹிந்து முன்னணி கண்டனம்

கோவில் நிதி தவறான பயன்பாடு; ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்: ''கோவில் நிதியை, அறநிலையத்துறை தவறாகவும், அலட்சியமாகவும் பயன்படுத்துகிறது'' என்று, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: பழநி ஸ்ரீ தண்டாயு தபாணி சுவாமி; திண்டுக்கல் அபிராமி அம்மன் போன்ற கோவில்களின் நிதியிலிருந்து திருமண மண்டபம் கட்டும் அரசாணையை கோர்ட் ரத்து செய்துள்ளது. கோவில் நிதியும், கோவில் நிலமும் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு முறையும், கோவில் நிதியில் அரசு திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறது. இது, ஹிந்து சமுதாயம் மீது நடத்தப்படும் மறைமுகத் தாக்குதல். முன்னோர்களும், மன்னர்களும் ஹிந்து சமுதாயம் நல்ல முறையில் வாழ கோவிலை கட்டினர்; கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்தனர். அதன் மூலம், விளக்கு பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்த வழி வகுத்தனர். இதை தவறாக பயன்படுத்தி தமிழக அரசு, ஹிந்து கோவிலை மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, அதன் வருமானத்தை சீரழிக்கிறது. இந்த செயலுக்காக கோர்ட், தமிழக அரசை பலமுறை கண்டித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்திய தீர்ப்பில் கூட, கோவில் நிதியை அரசு மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்; திருமண மண்டபம் கட்டுவது என்பது வணிக நோக்கம் என்று கடிந்து கூறப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பக்தர்கள் நிதியிலிருந்து, திருமண மண்டபம் கட்டினால், அது காலபோக்கில் தெய்வ நம்பிக்கையை அற்றவர்களுக்கும் பயன்படுத்தும் இடமாகவும் மாறி விடுகிறது. கோவில் நிதியை கொள்ளையடிக்க திட்டமிட்டு, கட்டடம் கட்டும் வேலைக்கே, அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்காகவே, புதிது புதிதாக பல உத்தரவுகளை அரசு பிறப்பிக்கிறது. கோவில் நிதியையும், நிலங்களையும், கோவிலையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும், எந்த திட்டமாக இருந்தாலும் ஹிந்து முன்னணி பார்த்து கொண்டு சும்மா இருக்காது. அனைத்து ஹிந்துக்களையும் இணைத்து கடுமையாக போராடும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை