உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் நிலம் மீட்பு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: ஹிந்து முன்னணி கோரிக்கை

கோவில் நிலம் மீட்பு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: ஹிந்து முன்னணி கோரிக்கை

அன்னுார்; 'கோவில் நிலம் மீட்பு குறித்து வெள்ளை அறிக்கை தேவை' என ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹிந்து முன்னணியின் கோவை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அன்னுாரில் நேற்று நடந்தது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், கோட்ட செயலாளர் உருவை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டத்தில் 865 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஞ்சித் ஆகியோரை அழைக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்ட முடிவில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை, ஊழல் துறையாக மாறிவிட்டது. திருப்பணிக்கு அனுமதி தர லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர். சிறுபான்மை நிறுவனங்களின் இடத்தில் மர்ம மரணம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால். இந்துக்களின் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிதாக விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்குவதில்லை. பல ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டதாக அறநிலையத்துறை கூறுகிறது. ஆனால் யாரிடம் இருந்து மீட்டார்கள் என்பது குறித்த முழுமையான வெள்ளை அறிக்கை தேவை. பல கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். நன்கொடையாளர்களிடம் பணம் பெற்றுத்தான் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கு அரசு நிதி வழங்குவதில்லை. தமிழகத்தில் இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக செயல்படும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை