போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது
பொள்ளாச்சி; பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழுவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை; கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும், போராட்டம் துவங்குவதற்கு முன், அவர்களை குண்டு கட்டாக துாக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனால், அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.கைது செய்யப்பட்ட, பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் வாழக்கூடிய ஹிந்துக்களை கொலை செய்து, கோவில்களை சேதப்படுத்துகின்றனர். வங்கதேச ஹிந்துக்களை பாதுகாக்க இந்தியா முழுவதும் உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அனுமதி கொடுக்க மறுப்பது கண்டனத்துக்குரியது,'' என்றார். உணவு வழங்கல!
போராட்டத்தில் ஈடுபட்ட, 30 பெண்கள் உள்ளிட்ட, 155 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். அவர்களுக்கு மதியம் உணவு தாமதமாக வழங்கப்பட்டதுடன், குறைந்த நபருக்கு மட்டுமே உணவை வழங்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கைது செய்யப்பட்டோர் சாப்பிட மறுத்து கோஷங்களை எழுப்பினர்.