பழங்குடியின மக்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை
வால்பாறை: மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், மருத்துவக்குழுவினர் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடு தேடி சென்று சகிச்சை அளிக்கின்றனர்.வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வீடுகளில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் உள்ளவர்களை, மக்களை தேடி மருத்துவக்குழுவினர் வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ள சங்கரன்குடி, பாலகணாறு, வெள்ளிமுடி, நெடுங்குன்று, உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நடக்க முடியாமல் உள்ளவர்களை கண்டறிந்து, டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் இயல்முறை மருத்துவர் மேக்லின் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இடுப்பு எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கிறோம்.பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் நேரில் சென்று, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை, 950 பேருக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினார்.