வீடு கட்டியும் பட்டா ரத்து; ஏழை பெண் போராட்டம்
கோவை; கட்டிய வீட்டுக்கான பட்டாவை ரத்து செய்த, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, போத்தனுார் செட்டிபாளையத்தை சேர்ந்த பெண், கடந்த ஓராண்டாக மாவட்ட நிர்வாகத்துடன் போராடி வருகிறார். 2003ம் ஆண்டு, போத்தனுார் செட்டிபாளையம் கம்பர் நகரில் உள்ள க.ச.எண்.435/2ல் சைட் எண் 74/162 க்கு மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையும், சுதாமணி என்ற பெண்ணுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அப்பெண் அந்த இடத்தில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் அறிவுரைப்படி அஸ்திவாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டி அமைத்து, குடிசைவீடு கட்டி குடியிருந்து வருகிறார்.அவரது குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட பாதிப்பால், வேலுார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார். இச்சூழலில், கடந்த ஆண்டு ஆக.,5 அன்று, ஒத்தக்கால் மண்டபம் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், சுதாமணிக்கு வழங்கிய வீட்டுமனைப்பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுதாமணி, கடந்த ஓராண்டாக கலெக்டர் அலுவலகத்துக்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனு கொடுத்து வருகிறார். ஆனால் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக கவலையுடன் தெரிவித்தார்.சுதாமணி கூறுகையில், ''இதே பகுதியில் ஏராளமான பட்டாதாரர்கள், இனியும் வீடு கட்டாமல் காலியாகவே இடத்தை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இ-பட்டா வழங்கியுள்ளனர். ''ஆனால் வீடுகட்டியுள்ள எனது பட்டாவை ரத்து செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து உண்மை தன்மையை அறிந்து, எனக்கான பட்டாவை எனக்கே மீண்டும் வழங்க வேண்டும்,'' என்றார்.