எத்தனை வாகனங்கள் போகுது கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
வால்பாறை, ;வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளதால், இங்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நிறைந்து காணப்படும்.பொள்ளாச்சி கோட்டம், வால்பாறை உட்கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதன் அடிப்படையில் சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலா தலமான வால்பாறைக்கு நாள் தோறும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை சாலையை பயன்படுத்துகின்றன.தினமும் எத்தனை வாகனங்கள் பயணிக்கின்றன என்ற விபரத்தை அறிய, ஆழியாறு, அட்டகட்டி, ரொட்டிக்கடை உள்ளிட்ட ஆறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகன கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை மலைப்பாதையில், விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நாள் தோறும் எத்தனை வாகனங்கள் செல்கின்றன என்பது குறித்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.கணக்கெடுப்பின் அடிப்படையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, கூறினர்.இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.