எவ்வளவு சம்பளம் உயர்த்தி தருவீர்கள்? துாய்மை பணியாளர்கள் சரமாரி கேள்வி
கோவை: புதிய ஒப்பந்தத்தின்படி எவ்வளவு சம்பளம் உயர்த்தி தருவீர்கள் என்ற கேள்வியை, துாய்மை பணியாளர்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தரம், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 450க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்களும் பணிபுரிகின்றனர். இங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்த துாய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி வந்தனர்.இந்நிலையில், நிரந்தர துாய்மை பணியாளர்களை நியமிக்க தடை விதித்து இரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை(எண்: 152) வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சி முழுவதும் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டது, ஒப்பந்த பணியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை அவர்கள் முன்நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் மோகன் ஆகியோர், துாய்மை பணியாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் அமல் தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் அறிமுக கூட்டம் நடத்தினர்.துாய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:துாய்மை பணியாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல ஆண்டுகளாக, பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவது வேதனைக்குரியது. பணி நிரந்தரம் கோரிக்கையை கூட்டத்தில் முன்வைத்தும் எந்த பதிலும் வரவில்லை.மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலியை வழங்க வேண்டும். மாதச்சம்பள ரசீது வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு புதிய ஒப்பந்தத்தின்படி, எவ்வளவு சம்பளம் உயர்த்தி தருவீர்கள் என்ற கேள்விக்கு, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லையேல், போராட்டத்தை விட்டால் வேறு வழியில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.