உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவற்றில் ஏற்படும் நீர் கசிவை நிரந்தரமாக தடுப்பது எப்படி? பொறியாளர் கூறும் யோசனை

சுவற்றில் ஏற்படும் நீர் கசிவை நிரந்தரமாக தடுப்பது எப்படி? பொறியாளர் கூறும் யோசனை

இ ன்றைய காலகட்டத்தில் நாம் வாழ்நாள் கனவாக ஆசையாக கட்டும் வீடுகள் மற்றும் பொது உபயோக கட்டடங்களில் கட்டிய சில காலங்களிலே, உட்புறமும், வெளிப்புறமும் ஈரப்பதம் தோன்றுவதாலும், நீர் கசிவுகள் ஏற்படுவதாலும், பாதிப்புகள் உண்டாகின்றன.இதில் முதன்மையாக, கட்டடத்தின் அடிப்பகுதியான 'பேஸ்மென்ட்' அளவில் தரைப்பகுதியில் இருந்து மேலாக சுவற்றில் நீர் கசிவு தோன்றி, அதன் பாதிப்புகள் உயர்ந்து கொண்டே வரும். இதன் காரணமாக வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் தரையில் நீர் தன்மை தோன்றுதல், சுவரில் பெயின்ட் பூச்சு உதிர்தல் உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின்றன.இதுகுறித்து, கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் கூறியதாவது:கட்டடத்தின் ஆரம்ப பகுதியான தரையில் அமைக்கப்படும் கான்கிரீட் பீம், பேஸ்மென்ட் மற்றும் மண் தரை சந்திக்கும் இடத்தில் அமைக்காதது, இதற்கு முக்கிய காரணம். பேஸ்மென்ட் உயரத்திற்கு மண் நிரப்பும் போது, நீர் தன்மையை தக்க வைக்கும் மண் கொண்டு நிரப்புவது, களிமண் அல்லது வண்டல் மண் கட்டடக்கழிவுகள் கொண்டு நிரப்புவது போன்றவற்றை காரணமாக கூறலாம்.

கட்டடம் கட்டும் முன்

தகுந்த பொறியாளரின் ஆலோசனை பெற்று, கட்டடத்திற்கு உறுதியான அஸ்திவாரம் அமைக்க மண் பரிசோதனை செய்யும் போது, நீர் தன்மையை தக்க வைக்கும் பண்புகள் உள்ளதா என்பதையும் அறிய முற்பட வேண்டும்.அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அம்மண்ணை முற்றிலும் அகற்றிவிட்டு நல்ல உறுதியான கிராவல் மண்ணால் நிரப்ப வேண்டும். கட்டடம் அஸ்திவாரம் அமைக்கும்போது, கட்டடத்தின் அனைத்து சுவர்களும் உறுதியான கான்கிரீட் பீம்களின் மேல் வரும்படியும், அது தரைப்பகுதியின் மட்டத்தில் அமையும் படியும், அதற்கு மேல் சுவர்கள் கட்டும்படியும் செய்ய வேண்டும்.

நவீன முறைகள்

பேஸ்மென்ட் உட்புறம் தேவையான உயரத்திற்கு மண்ணை நிரப்ப, நீர் தன்மை தக்க வைத்துக் கொள்ளாத, தரமான கிராவல் மண்ணை பயன்படுத்த வேண்டும்.பேஸ்மென்ட் கட்டிய பிறகு, வீட்டின் தரைப்பகுதியில் நீர் கசிவை தடுக்கும் வகையில், மூன்று முதல் நான்கு அங்குல உயரத்தில், நீர் தடுப்பு கான்கிரீட் ஸ்லாப் அமைத்தல் வேண்டும்.'டேம்ப் புரூப் கோர்ஸ்' எனப்படும் பிட்டுமினஸ் கோட்டிங், இ.பி.டி.எம்., மெம்பரைன் கோட்டிங், போன்ற நவீன முறைகளை பயன்படுத்தலாம். இவ்விதங்களில் தரையில் இருந்து, சுவர்களில் நீர் தன்மை உயர்ந்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.கட்டி முடித்த கட்டடங்களில், இம்மாதிரியான நீர்க்கசிவு தோன்றுவதை தடுக்க, நீர்புகா கான்கிரீட் தரை அமைத்தல், நீர்க்கசிவு ஏறாதவாறு சுவரை உறுதிப்படுத்தும் நவீன பூச்சுகளை பயன்படுத்துதல் வேண்டும். கட்டடத்தின் சுற்றுப்புற காலியிடங்களில், எப்போதும் நீர் தேங்காதவாறு முறையான வடிகால்கள் அமைத்தல் வேண்டும்.சிறிய அளவில் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், உலர் காற்று அல்லது சூடான காற்று கொடுக்கும் சிறு இயந்திரங்கள் கொண்டு, சுவற்றில் உள்ள ஈரப்பதத்தை காய வைத்து, பிறகு நீர் கசிவை தடுக்கும் பூச்சுகளை பயன்படுத்தலாம். இதன் வாயிலாக, நிரந்தரமாக சுவற்றில் ஏற்படும் நீர் கசிவுகளை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி