பிரிந்து வாழ்ந்த மனைவியை குத்திக்கொன்ற கணவன் கைது
பொள்ளாச்சி:மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாரதி, 27; பெயின்டர். இவர், பாலகோபாலபுரத்தைச் சேர்ந்த ஸ்வேதா, 26, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்தனர். பொள்ளாச்சியில் குழந்தைகளுடன் வசித்த ஸ்வேதா, தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம் போல காலை 9:00 மணிக்கு வேலைக்கு சென்ற ஸ்வேதாவை, திருநீலகண்டர் வீதியில் பைக்கில் சென்று மறித்து, பாரதி பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாரதி, கத்தியால் ஸ்வேதாவை குத்தி கொலை செய்தார். கிழக்கு போலீசார், பாரதியை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'ஸ்வேதாவை சந்தேகப்பட்டதால் இருவரும் பிரிந்த நிலையில், நேற்று ஸ்வேதாவை சமரசம் செய்து அழைத்து செல்ல பாரதி வந்த போது, தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளது' என்றனர்.