உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள ஆய்வில் கண்டறிந்தால் சீல் வைக்கப்படும்! வரி ஏய்ப்பு செய்வோருக்கு நகராட்சி எச்சரிக்கை

கள ஆய்வில் கண்டறிந்தால் சீல் வைக்கப்படும்! வரி ஏய்ப்பு செய்வோருக்கு நகராட்சி எச்சரிக்கை

பொள்ளாச்சி: ''பொள்ளாச்சி நகராட்சியில் வரி ஏய்ப்பு செய்யும் வணிக நிறுவனங்கள், உடனடியாக முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், ஆண்டுக்கு, 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டியுள்ளது.இந்த வருவாயை கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள், நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன. தற்போது, வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு, வணிக செயல்பாடுகள் செய்து கொண்டும், பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும் குறைந்த அளவே வரி செலுத்தியும் சிலர் நகராட்சிக்கு தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சியில் வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டறிய, கள ஆய்வுப்பணியில் நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில் தனிக்குழுவினர், டி.கோட்டாம்பட்டி பகுதியில் உள்ள குடோன்கள், தனியார் பள்ளிகள், ராஜாமில் ரோட்டில் உள்ள வணிக வளாகங்களில், விதிமுறை மீறல் உள்ளதா என ஆய்வு செய்தனர்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது: திருப்பூர் மண்டலத்தில் அதிக வரி நிலுவை வைத்துள்ள நகராட்சியாக உள்ளதால், வரிவசூலை தீவிரப்படுத்த தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி நிர்வாகம் வாயிலாக வரி ஏய்ப்பு கட்டடங்களை முறைப்படுத்திக்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டது.வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், நகரில் உள்ள கட்டடங்களின் ஜி.எஸ்.டி., மற்றும் மின்கட்டணம் குறித்த பட்டியல் உள்ளது. அதைக்கொண்டு வீட்டு வரி செலுத்தி வணிக பயன்பாட்டுக்கு கட்டடம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து முறைப்படுத்த தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் வரி முறைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட நிறுவனங்கள் தானாக முன் வந்து வரியை முறைப்படுத்திக்கொண்டதால், இதுவரை, ஒரு கோடியே, 75 லட்சம் ரூபாய் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்கள் உடனடியாக அவர்களாகவே முன்வந்து, வரியை முறைப்படுத்தி செலுத்த வேண்டும். கள ஆய்வில் தொடர்ந்து முறைப்படுத்தாமல் ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், சட்டப்படி 'சீல்' வைக்கப்படும்.நகராட்சி கட்டட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டங்களை கண்டறிந்தால், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சட்ட விதிகளின் கீழ், 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை