உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களின் கோரிக்கைகள் நிறைவேறினால்  வளர்ச்சி வரும்!: எதிர்பார்ப்புகளுடன் பிறக்கிறது புத்தாண்டு

மக்களின் கோரிக்கைகள் நிறைவேறினால்  வளர்ச்சி வரும்!: எதிர்பார்ப்புகளுடன் பிறக்கிறது புத்தாண்டு

பொள்ளாச்சி: இன்று பிறக்கும், 2026 ஆங்கில புத்தாண்டிலாவது பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், இந்தாண்டாவது இது நிறைவேறுமா என, எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு ஆண்டையும் மக்கள் வரவேற்கின்றனர். இதில், 2026 ஆங்கில புத்தாண்டில் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது, மக்களின் பல ஆண்டு கனவாக இருக்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் அரசு பட்ஜெட் கூட்டத்தில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்டம் அறிவிப்பு வருமா? இந்த, 2026ல் பொள்ளாச்சி மாவட்டமாக நிறைவேற வேண்டும் என, பலர் விரும்புகின்றனர். பொள்ளாச்சி என்றாலே பலருக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். காரணம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் வளமான மண், மேற்கு தொடர்ச்சி மலைகளின் காலநிலை மற்றும் அதிக நீர்ப்பாசனம் காரணமாக இப்பகுதி இளநீர் ருசியாகவும், சத்தாகவும் உள்ளது. மேலும், பல வெளி மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது. ஆனால் தற்போது தென்னையில் நோய்த்தாக்குதல் இருப்பதால் விவசாயிகள் சிலர், மாற்றுப்பயிர் செய்ய ஆயத்தமாகின்றனர். எனவே, தென்னை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டாரத்தில், அதிக அளவில் ஆன்மிகம் சார்ந்த கோவில்கள் மற்றும் சுற்றுலா செல்லும் இடங்கள் என, அதிக அளவில் உள்ளது. இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், பொள்ளாச்சி பகுதிக்கு அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், வெளிநாட்டவர்கள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, பொள்ளாச்சி பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். தாலுகா ஆபீசுக்கு கட்டடம் இல்லை கிணத்துக்கடவு தனி தாலுகாவாக கடந்த, 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின் கிணத்துக்கடவில் தாலுகாவுக்கு என, தனி அலுவலகம் இன்று வரை இல்லை. இதற்கு மாற்றாக ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் இருக்கும் கட்டடத்தில் செய்யல்பட்டு வருகிறது. மேலும், கிணத்துக்கடவுக்கு அடுத்து தாலுகாவாக அறிவிக்கப்பட்ட மதுக்கரை கூட, தாலுகா அலுவலகம் மற்றும் கோர்ட் என, அரசு கட்டடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த, 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இரு கட்சிகள் மற்றும் அதிகாரிகள் கிணத்துக்கடவு முக்கிய பகுதியில் கோர்ட் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மக்கள் செல்லும் நிலை உள்ளது. கோதவாடி குளத்தை நிரப்ப வேண்டும் என, பல முறை விவசாயிகள் மற்றும் மக்கள் அதிகாரிகளிடம் மனு வழங்கியும், வாய்மொழியாக தெரிவித்தும் வந்தார்கள். ஆனால் கடந்த, 5 ஆண்டுகளில் ஒரு முறை முழுவதுமாகவும், மற்றொரு முறை குளத்தின் ஒரு பகுதியும் நிரப்பப்பட்டது. இதைத்தவிர்க்க, பி.ஏ.பி., யில் இருந்து கேரளாவுக்கு செல்லும் உபரி நீர் கோதவாடி குளத்திற்கு விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பல ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஜன 01, 2026 14:48

பொள்ளாச்சி சி.டி.சி மேட்டில் மூன்றாவது பேருந்து நிலையம் கட்டி முடியும் தருவாயில் உள்ளது.... அந்த இடத்தில் பல ஆண்டுகளாக அரச மரத்துடன் கூடிய சிறிய கோவில் உள்ளது. இதனால் யாருக்கும் இடையூறு இல்லை.... இப்பொழுது மரத்தை வெட்டி, கோவிலை ரோட்டு ஓரத்தில் மாற்றி வைக்கும் வேலை வேகமாக நடக்கிறது..... வருங்காலத்தில் சாலை விரிவாக்கம் நடந்தால் கேள்வி கேட்பார் இன்றி கோவில் இடிக்கப்படும்... லாரிபேட்டை, வெங்காய மண்டி, பழைய இரும்பு கடை, பலசரக்கு கடை என்று பல ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தால் எதிரில் உள்ள இரயில் நிலையம் வளர்ச்சி அடையும், பொது மக்களும் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது.... ஏனோ தொலை நோக்கு பார்வை இல்லாமல் இந்த நிர்வாகம் செயல்படுகிறது.... இது இப்படி இருக்க தனி மாவட்டம் ஆவது பகல் கனவு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை