படிக்க வெச்சிட்டா போதும் :குடும்பத்துக்கு வெளிச்சம் தரும்
மேட்டுப்பாளையம்: கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுரைப்படி, தமிழக போலீசாரின் கோவை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காரமடை திம்மம்பாளையம் புதுாரில், சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்.ஐ., கனிமொழி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் உள்ளிட்டோர் இப்பகுதி மக்களுக்கு, சட்ட பாதுகாப்பு மற்றும் தமிழக அரசால் கிடைக்கக்கூடிய சலுகைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உட்பட அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தனர். காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன் பேசுகையில், ''மதுவால் குடும்ப பொருளாதாரம் பாதிக்கும். உடல் பாதிப்பு ஏற்படும். உங்களுக்கு தொந்தரவு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பு முக்கியம். பள்ளிக்கு அனுப்பாமல் உங்களது குழந்தைகளை உங்களுடன் வியாபாரத்திற்கு உடன் அழைத்துச் செல்லக்கூடாது. ஐந்து வயதான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பெண் குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிகவும் அவசியம்,'' என்றார். எஸ்.ஐ., கனிமொழி பேசுகையில், ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு மக்களுக்காக தான் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளது. தொழில் துவங்க, தாட்கோ வாயிலாக மானிய விலையில் கடன் வழங்கப்படுகிறது. நம் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், '100' என்ற எண்ணுக்கு அழைத்தால், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விடுவர். போதைப்பொருள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை நடைபெற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார். காரமடை நரிக்குறவர் சங்கத் தலைவர் துரை, கோவை மாவட்ட சமூக நிதி பிரிவு போலீசார் தம்புராஜ், மணிகண்டன், சமூக ஆர்வலர்கள், திம்மம்பாளையம் புதுார் மக்கள் பலர் பங்கேற்றனர்.----