ரயிலை பொள்ளாச்சியில் நிறுத்துவதால் பாதிப்பு
கிணத்துக்கடவு; கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக மதுரை --- கோவை ரயில் (16722), இயக்கப்படுகிறது. கிணத்துக்கடவில் இருந்து, 3:00 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது. இங்கிருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட பயணியர் செல்கின்றனர். தற்போது, போத்தனூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த ரயில், இன்று ஒரு நாள் மட்டும் (22ம் தேதி) பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, போத்தனூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து, மதுரை செல்லும் பயணியர் பாதிக்கப்படுவர். பராமரிப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இந்த ரயில் அடிக்கடி பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.