ரயில்வே ஸ்டேஷனில் வசதிகளை மேம்படுத்துங்க! வீல் சேர் குறித்த அறிவிப்பு தேவை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரயில் பயணியர் கூறியதாவது:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு மருத்துவ அறுவை சிகிச்சை செய்து வருவோர், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல, வீல் சேர் சரியான இடத்தில் வைக்க வேண்டும். வீல் சேர் எங்குள்ளது என்ற விபரம் தெரியாமல் அதிகாரிகளிடம் கேட்க வேண்டியதுள்ளது. அவர்கள் கூறும் இடத்துக்கு சென்று எடுத்து வருவதற்குள் ரயில் வந்துவிடும் நிலை உள்ளது.ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், மீண்டும் ஊருக்கு செல்வதற்காக வருகின்றனர். அவர்களது சிரமம் போக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் எங்குள்ளது என்ற அறிவிப்பு வைக்க வேண்டும்.அல்லது, வீண் அலைச்சலை தவிர்க்க வீல் சேர்களை முன்பகுதியில் வைக்கலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், பேட்டரி கார் பயன்படுத்தலாம். இதற்காக சிறு தொகை கட்டணமாக பெறலாம்.மேலும், லிப்ட் வசதி ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனுடன் இப்பணிகளையும் மேற்கொண்டால், பயனாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்.