கோவை அரசு பள்ளிகள் தேர்ச்சியில் முன்னேற்றம்
கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் அரசு பள்ளிகள் கடந்த ஆண்டை விட, அதிக தேர்ச்சி சதவீதத்தை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளன.இந்த ஆண்டு மாவட்டத்தில், 23 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 100 சதவீத தேர்ச்சி பெறாத பல பள்ளிகள், இம்முறை முழுமையான தேர்ச்சியை பெற்றுள்ளன. பெரும்பாலான அரசு பள்ளிகள், 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்துள்ளன.அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த ஆண்டு 98.5 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இம்முறை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது. இதில் 18 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 163 மாணவிகள் தேர்வு எழுதியதில் 160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 20 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 167 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 159 பேர் தேர்ச்சி பெற்று 95.2 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த ஆண்டைவிட 1.25 சதவீதம் அதிகரித்து, இந்த ஆண்டு 92.02 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கணிதம், கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில், பின்தங்கிய மாநகராட்சி பள்ளிகளும் இம்முறை குறிப்பிடத்தக்க அளவில் அதிக தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளன.