10 நாட்களில் நடுரோட்டில் பள்ளம் கணபதி மாநகர் பிளாக் 3ல் அவலம்
கோவை: கணபதி மாநகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அதை சுற்றி புதிது புதிதாக லே-அவுட்டுகள் உருவாகி இருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால், வாகன போக்குவரத்து அபரிமிதமாக காணப்படுகிறது. வேலைக்குச் செல்வோர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வோர் என காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோரும் அதிகமாக உள்ளனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டது. குண்டும் குழியுமாக இருந்த ரோடு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. அதில், கணபதி மாநகர் பிளாக் எண் 3 மெயின் ரோட்டில், 10 நாட்களுக்கு முன் தார் ரோடு போடப்பட்டது. இவ்வழியாக கனரக வாகனம் சென்றபோது அழுத்தம் தாங்காமல் ஒரு பகுதியில் மட்டும் மண் கீழிறங்கி, ரோடு பள்ளமாகி விட்டது. குழிக்குள் தேவையான அளவு மண் கொட்டி இறுக வைத்து சமப்படுத்தாமல், மேலோட்டமாக கொட்டி, தார் ரோடு போட்டதால், தற்போது பள்ளமாகியிருக்கிறது. பகல் நேரத்தில் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் பள்ளத்தை பார்த்ததும் விலகிச் சென்று விடுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். இவ்வீதியில் ரோடு போட்ட ஒப்பந்ததாரர் யாரென்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து, அவ்விடத்தில் 'பேட்ச் ஒர்க்' போடும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அப்பணி தரமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை பொறியியல் பிரிவினர் கண்காணித்து மீண்டும் இதுபோன்ற பள்ளம் உருவாகாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.