கோவை : கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 'ஹிலாரிக்காஸ்' கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,பவானீஸ்வரி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். திரை நட்சத்திரங்களின் வரவு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்ச்சி களைகட்டியது. மாநில அளவில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், நடனம், இசை, கவிதை போட்டி, கோலப்போட்டி, குழு நடனம், நாடகம், கழிவுகளில் இருந்து கலைநய பொருட்கள் உருவாக்கம், ஆடை அலங்கார அணிவகுப்பு, வலைதளம் உருவாக்கம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் இடையில், திரை நட்சத்திரங்கள், பாடகர்கள் பலர் அவ்வப்போது வருகை புரிந்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். காலை அமர்வில், சாம் விஷால் பங்கேற்று மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பாடல்களை பாடி மகிழ்வித்தார். தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று நடனமாடினார். தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில், நாளை திரைக்கு வரவுள்ள, 'சைரன்' திரைப்படத்தின் பிரத்யேக காட்சி மற்றும் 'டிரய்லர்' திரையிடப்பட்டது. தொடர்ந்து, வி.ஜே.,சித்து மற்றும் ஹர்சத்கான், பாடகி விருஷா, நடிகை அணிகா, நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர் அர்ஜின் தாஸ் ஆகியோர் பங்கேற்று, மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர். 'ஏழு கடல் ஏழு மலை 'படக்குழுவினர், இயக்குனர் ராம், நடிகை அஞ்சலி ஆகியோர், படத்தின் ஆடியோவை வெளியிட்டனர். மாலையில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். இந்துஸ்தான் கல்விக்குழுமங்களின் தலைவர் கண்ணையன், செயலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.