நெருங்குகிறது வருவாய்வழி உதவித்தொகை தேர்வு; சிறப்பு பயிற்சி அளிக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
கோவை; என்.எம்.எம்.எஸ்., தேர் வுக்கு விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், ஏழை மாணவர்கள் பயன்பெறும் நோக்கில், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு பிப்., 22ம் தேதி நடக்கிறது.இதற்கு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், www.dge.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், அந்தந்த பள்ளிகள் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும், 24ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 9 முதல் பிளஸ்2 வரை, மாதம் ரூ.1,000 என, நான்கு ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 1,210 அரசுப் பள்ளிகள், 177 அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.ஆனால், ஆண்டுதோறும் இத்தேர்வை, 5,000 பேர் வரை மட்டுமே எழுதுகின்றனர். கடந்தாண்டு அதிகபட்சமாக, 250 பேர் தேர்ச்சி பெற்றனர்.அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்வியாளர்கள் கூறுகையில், 'என்.எம்.எம்.எஸ்., தேர்வில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக, ஆசிரியர்கள் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு திட்டமிட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தால் போதும். 'இதற்கென, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம் அமைத்து, வார இறுதி நாட்களில் பயிற்சி அளிக்க வேண்டும்' என்றனர்.
பரிசீலனை!
கல்வி அதிகாரிகள் கூறுகையில்,'இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு பள்ளியிலும், எட்டாம் வகுப்பில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படும்' என்றனர்.