முன்னாள் அமைச்சரின் உறவினர் வீடுகள் நிறுவனங்களில் வருமானவரி சோதனை
கோவை: அ.தி.மு.க.,- முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துடன், நெருங்கிய தொடர்புடைய கோவை உறவினர்களின் வீடுகளில், அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது, வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில்தான், தற்போது தனியே ஒரு வழக்குப் பதிவு செய்து, சோதனையிட்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில், வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான, தமிழகத்திலுள்ள 10 இடங்களில் நேற்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.கோவை, சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும், ஒரு தனியார் நிறுவனத்திலும், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் ஒருவர் வீட்டிலும், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் மற்றொரு உறவினர் வீட்டிலும், சோதனை நடந்தது. சிவானந்தா காலனியில் நடந்த சோதனையில், காரில் குழுவாக வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கேட்டுக்கு உள்புறமாக பூட்டு போட்டுவிட்டு, சோதனை மேற்கொண்டனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலையில் நிறைவு பெற்றது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, எடுத்துச்சென்றனர்.