பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில் மக்கள் நலப்பணியில் ஆர்வம் காட்டாமல், தி.மு.க.,வினர் லஞ்சம், முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்,' என, நகர பா.ஜ., சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், நகராட்சி பிரச்னைகளை பட்டியலிட்டு, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நுழையும் பகுதியில் உள்ள சிறு பாலம் கட்டுமானப்பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இப்பணிகள் மந்தமாக நடப்பதால், பொள்ளாச்சி நகரின் மைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.பஸ் ஸ்டாண்ட் சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்தாமல், ரோட்டை கடந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டை இணைக்கும் சுரங்கபாதையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.வளர்ந்து வரும் நகரமாக பொள்ளாச்சி இருந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படைத்தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. நகரின் பல இடங்களில் மோசமான ரோடுகள், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கு குழிகள் சிதிலமடைந்து வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது. நகரின் முக்கிய சாலைகளில் தெருவிளக்குகள், மையத்தடுப்புகளில் அமைக்கவில்லை.சமீபத்தில் தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மக்களுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடாமல், லஞ்சம், முறைகேட்டில் ஈடுபடும் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெப்பக்குளம் அருகே சாக்கடை நீர், மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தை மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து தி.மு.க.,வை சேர்ந்த அமைப்பு ஆட்டோ ஸ்டாண்ட், பெட்டிக்கடை அமைத்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் செல்லும் நிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
கமிஷனுக்காக சண்டை!
பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு கூறுகையில், ''பொள்ளாச்சி நகராட்சியில் 'கமிஷன்' பணத்துக்காக, தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் சண்டை போடுகின்றனர். பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என கமிஷன் வரும் திட்டங்களே செயல்படுகின்றன. இங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.டாஸ்மாக் மதுக்கடை 'பார்' ஏலம் எடுப்பதில் அக்கறை காட்டும் ஆளுங்கட்சியினர், நகரின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவும், மக்கள் பிரச்னைகளை தீர்க்கவும் அக்கறை காட்ட வேண்டும்,' என்றார்.