வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உறுப்புத்திருடர்களுக்கும் மதமாற்றம் செய்து வருபவர்களுக்கும் இருக்கும் தொடர்பு இரு ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதே ??
நாங்களே அவர்கள் காணாமல் போக மாட்டார்களா? என்று வேண்டிக்கொண்டு இருக்கிறோம். இதில் கவனமாக இருக்கணுமாம்.
கோவை: வயது முதிர்வு, மனநல பாதிப்பு, குடும்ப பிரச்னை, காதல் விவகாரம் உள்ளிட்ட பல காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள் காணாமல் போகும் சம்பவங்கள், கோவை மாநகரில் தொடர்கின்றன. காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகம் இருப்பது முதியோர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எட்டு மாதங்களில் காணாமல் போனதாக 413 பேர் குறித்து புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், 129 ஆண்கள், 177 பெண்கள், 25 சிறுவர்கள், 82 சிறுமிகள். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. போலீசார் தேடி இதுவரை 78 ஆண்கள், 128 பெண்கள், 20 சிறுவர்கள், 71 சிறுமிகள் என மொத்தம் 297 பேர் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போவதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. குடும்ப பிரச்னை, மன உளைச்சல், காதல் விவகாரம் உள்ளிட்ட காரணங்களுடன், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மறதியும் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, சில முதியோர் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு, தாங்கள் எங்கு செல்கிறோம், எந்த பகுதியில் வசிக்கிறோம், வீட்டுக்குத் திரும்பும் வழி எது என்பதையே மறந்து விடுகின்றனர். இதனால், வழி தெரியாமல் பல பகுதிகளுக்கு சென்று தவிக்கும் நிலை ஏற்படுகிறது. சிலர் வெகுதுாரம் சென்ற பிறகு மீட்கப்படுகின்றனர். அடையாளம் மற்றும் முகவரி தெரியாததால், அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதிலும் சிரமம் ஏற்படுவதால், வெளியில் செல்லும் முதியோர் விஷயத்தில் வீட்டார் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.
போலீசார் கூறுகையில், 'காதல் விவகாரம், குடும்பத்தகராறு காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதுதவிர, மொத்த புகார்களில், 30 முதல் 40 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். குடும்பங்களில் சரியான மரியாதை இல்லை, பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதாக குற்ற உணர்வால் சிலர் தெரிந்தே வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர். பல புகார்களில், வயது முதிர்வு காரணமாக வெளியில் செல்லும் போது மறதி ஏற்பட்டு மீண்டும் வீடு திரும்ப முடியாமல் வழி தவறி விடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை சற்று கவனமுடன் இருந்தால் தவிர்க்கலாம். தற்போது, டிராக்கர் போன்றவை உள்ளன. மறதி நோய் உள்ள முதியோருக்கு இதை பயன்படுத்தலாம்' என்றனர்.
மறதி பிரச்னை உள்ள முதியோரை, தனியாக வெளியே அனுப்புவதில் கவனம் வேண்டும். வீட்டில் இருந்து வெளியே சென்றால், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் சட்டைப்பை அல்லது கைப்பையில் பெயர், வீட்டு முகவரி, குடும்பத்தினரின் மொபைல் எண் ஆகிய விவரங்களை வைத்திருப்பது உதவியாக இருக்கும். சமீபத்திய புகைப்படம் மற்றும் அடையாள விவரங்களையும் குடும்பத்தினர் வைத்திருக்க வேண்டும். முதியோர் நீண்ட நேரமாக வீடு திரும்பாதபோது, உடனடியாக தேட வேண்டும்.
உறுப்புத்திருடர்களுக்கும் மதமாற்றம் செய்து வருபவர்களுக்கும் இருக்கும் தொடர்பு இரு ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதே ??
நாங்களே அவர்கள் காணாமல் போக மாட்டார்களா? என்று வேண்டிக்கொண்டு இருக்கிறோம். இதில் கவனமாக இருக்கணுமாம்.